திறனாய்வு கேள்வி
இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கடும் மனநலக் கேடு கொண்ட வயது வந்தவர்களுக்கென்று குறிப்பாக வடிவமைக்கப்பட்ட நீரிழிவு சுய-மேலாண்மை சிகிச்சை தலையீடுகளின் விளைவுகள் என்ன?
பின்புலம்
உலகளவில், சுமார் 41.5 கோடி மக்களை பாதிக்கும் நீரிழிவு நோய் மிக பொதுவான நாள்பட்ட நிலைமைகளில் ஒன்றாகும். மன நல பிரச்னைகள் இல்லாதவர்களை விட, மனக் குழப்ப நீக்கி மருந்துகளின் பக்க விளைவுகள், மற்றும் மோசமான உணவு மற்றும் குறைந்த மட்ட உடலியல் செயல்பாடு போன்ற பற்றாக்குறையான 'வாழ்க்கை முறை' போன்ற அநேக காரணிகளால் கடும் மனநலக் கேடு கொண்ட மக்கள் இரண்டு மடங்கு நீரிழிவு நோய் உருவாகுவதற்கு சாத்தியம் கொண்டவர்களாய் உள்ளனர். மருத்துவ அறுதியீட்டிற்கு பிறகு, மருந்துகள் மற்றும் நடத்தை மாற்றங்களின் கலவையை கொண்டு நீரிழிவு நோய் மேலாண்மை செய்யப்படுகிறது. நீரிழிவு நோய் மோசமாக மேலாண்மை செய்யப்படும் போது, கடுமையான மற்றும் உயிருக்கு-ஆபத்தான சிக்கல்கள் உருவாகக் கூடும். மக்கள் தங்களின் நீரிழிவு நோயை சுய-மேலாண்மை செய்வதற்கும் மற்றும் இவற்றின் சிக்கல்களின் சாத்தியக்கூற்றை குறைப்பதற்கும், ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர்கள் நோயாளி விளக்கக் கல்வி திட்டங்களை உருவாக்கி உள்ளனர். இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான அநேக திட்டங்கள் திறன் மிக்கவையாக காணப்பட்டாலும் கடும் மனநலக் கேடு கொண்டவர்களின் தேவைகளை குறிப்பாக சந்திக்க வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் பற்றி மிக குறைவாகவே தெரிந்துள்ளது.
ஆய்வு பண்புகள்
இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் சீஸோபிரேனியா அல்லது உளப்பாங்கு சிதைவு நலக் கேடு கொண்ட 64 வயது வந்தவர்களை சேர்த்த ஒரு ஆய்வை நாங்கள் அடையாளம் கண்டோம். வாரம் ஒரு முறை 90 நிமிடங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு 24-வார விளக்கக் கல்வி திட்டத்தை (நீரிழிவு நோய் விழிப்புணர்வு மற்றும் புனர்வாழ்வு பயிற்றுவிப்பு) வழக்கமான பராமரிப்புடன் இணைக்கப்பட்ட தகவல் துண்டுப்பிரசுரங்களோடு ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டனர். நீரிழிவு விளக்கக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி மீதான அடிப்படை தகவலை இந்த திட்டம் வழங்கியது. பங்கேற்பாளர்களின் சராசரி வயது 54 வருடங்களாக இருந்தது; பங்கேற்பாளர்கள் சராசரியாக 28 வயதிலிருந்து, இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் அவர்களின் உளநோய் அறுதியீடு ஆகியவற்றோடு சராசரியாக ஒன்பது வருடங்களாக வாழ்ந்துக் கொண்டிருந்தனர். உள்ளடக்கப்பட்ட ஆய்வில், திட்டம் முடிந்த பிறகு ஆறு மாதங்களுக்கு மக்கள் கண்காணிக்கப்பட்டனர்.
ஆதாரம் 07 மார்ச் 2016 வரைக்கும் நிலவரப்படியானது.
முக்கிய முடிவுகள்
சுருக்கமாக, கடும் மனநலக் கேடு கொண்ட வயது வந்தவர்களில் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான சுய-மேலாண்மை திட்டங்களின் விளைவுகளை குறைவான ஆய்வுகளே மதிப்பிட்டுள்ளன. உள்ளடக்கப்பட்ட ஒற்றை ஆய்வின் ஆசிரியர்கள், நீரிழிவு- தொடர்பான சிக்கல்கள், அனைத்து-காரண இறப்பு, பாதக நிகழ்வுகள், ஆரோக்கியம்-தொடர்பான வாழ்க்கைத் தரம் அல்லது சமூகபொருளாதார விளைவுகளை பற்றி அறிக்கையிடவில்லை. உடல் நிறை குறியீட்டெண் மற்று உடல் எடை, அத்துடன் நீரிழிவு பற்றிய அறிவு மற்றும் சுய-பலாபலன் ஆகியவற்றில் சிறிய மேம்பாடுகளை அவர்கள் விளக்கினர். இந்த வகையான திட்டங்கள் இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் கடும் மனநலக் கேடு கொண்ட மக்களில், அவர்களின் நீரிழிவு நோய் மற்றும் அதின் பின்விளைவுகளை சிறப்பாக சமாளிப்பதற்கு உதவும் என்பதற்கு தற்போதைய ஆதாரம் பற்றாக்குறையாக உள்ளது.
சான்றின் தரம்
உள்ளடக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்களின் சிறிய எண்ணிக்கை, மற்றும் அறிக்கையிட்ட ஆய்வு முடிவுகளின் நிலையற்ற தன்மை ஆகிய காரணங்களினால் ஆதாரத்தின் ஒட்டுமொத்த தரம் மிக குறைவானதென்று நாங்கள் மதிப்பிட்டோம்.
மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்