அழுத்தப் புண்கள் என்றால் என்ன?
அழுத்தப் புண்கள் (மேலும் படுக்கை ரணங்கள் அல்லது அழுத்த ரணங்கள் என்றழைக்கப்படும்) ஆகியவை தொடர்ந்த அழுத்தம் அல்லது உராய்வின் மூலம் ஏற்படும் காயங்கள் ஆகும். அவை, பொதுவாக அசைவற்று இருக்கும் அல்லது தங்களை நகர்த்துவதற்கு கடினமாக கருதும், உதாரணமாக முதியோர் அல்லது வாதமுடையோர்களை பாதிக்கும். அழுத்தப் புண்கள், அடிக்கடி உடலின் எலும்பு பகுதிகளான குதிகால், இடுப்பு, மற்றும் பிட்டம் போன்ற பாகங்களிலும் ஏற்படும். நீண்ட நேர அழுத்தத்தால், இந்த பகுதிகளில் இரத்த ஓட்டம் குறைவதை தொடர்ந்து, உயிரணுக்கள் இறப்பு, தோல் நசிவு, ஒரு திறந்த காயத்தின் வளர்ச்சி ஆகியவை அழுத்தப் புண்ணிற்கு வழிவகுக்கிறது. அழுத்தப் புண்கள் குணமடைவதற்கு அதிக நாள் எடுத்துக் கொள்ளும்- சிலது குணமடையாது - ஆதலால், முடிந்தால், அவற்றை வளர விடாமல் தடுப்பது முக்கியமாகுகிறது.
நீவுதல் (மசாஜ்) சிகிச்சை என்றால் என்ன?
மசாஜ் சிகிச்சை என்பது, உடலின் பாகங்களை கையாளல், தாங்குதல், நகர்தல் மற்றும் அழுத்தம் கொடுத்தல் போன்ற முறைகளை பயன்படுத்தும் சிகிச்சையாகும். மசாஜ் சிகிச்சை, ஒரு பகுதியில் இரத்த அளவை அதிகரித்து, திசு நெகிழ்ச்சியை மேம்படுத்தி, திரவ தேக்கத்தினால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். சில ஆய்வுகள், அழுத்தப் புண்கள் வளர்ச்சி அடையக்கூடிய ஆபத்தை கொண்ட மக்களில், மசாஜ் அத்தகைய வளர்ச்சியை தடுக்க முடியும் என்று கருத்து தெரிவிகின்றன, ஆனால் அது உண்மையில் வேலை செய்யுமா என்று தெரியவில்லை.
திறனாய்வின் நோக்கம்
தனியாக அல்லது பராமரிப்பு தொகுப்பின் ஒரு பகுதியாக அளிக்கப்பட்ட மசாஜ் சிகிச்சை, அழுத்தப் புண்கள் உருவாகுவதை தடுக்க பயனுள்ளதாக இருக்குமா என்பதை இந்த திறனாய்வு விசாரித்தது. திறனாய்வு ஆசிரியர்கள், மசாஜ் சிகிச்சையை போலி (பாவனை) மசாஜ், அல்லது வழக்கமான அழுத்தப் புண்கள் தடுப்பு பராமரிப்பு (ஒரு சிறப்பு மெத்தையில், ஒரு அசைவற்ற நோயாளியை தொடர்ச்சியான திருப்புதல் மற்றும் அழுத்தக் குறைப்பு மூலம்) ஆகியவற்றோடு ஒப்பிடுவதில் ஆர்வம் காட்டினர்.
திறனாய்வின் கண்டுப்பிடிப்புகள்
8, ஜனவரி 2015 வரையான மருத்துவ இலக்கியத்தை திறனாய்வு ஆசிரியர்கள் தேடினர், ஆனால் அழுத்தப் புண்களை தடுப்பதற்கான மசாஜ் சிகிச்சையை பற்றிய தொடர்புடைய சோதனைகளை கண்டறிய முடியவில்லை. எனவே, அழுத்தப் புண்களை தடுப்பதற்கு மசாஜ் சிகிச்சையை ஒரு தடுப்பு சிகிச்சையாக கருதி ஆதரவளிக்க அல்லது நிராகரிக்க தற்போது எந்த ஆதாரமும் இல்லை. மசாஜ் சிகிச்சை வேலை செய்யுமா மற்றும் பாதுகாப்பானதா என்பதை நிலைநாட்ட, இந்த பகுதியினை ஆய்ந்து அறிய வேண்டிய சோதனைகள் அவசரமாக தேவைப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.