வெல்லமுள்ள நீரிழிவு நோயாளிகளின் குளுக்கோசு மட்டத்தைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மருந்தான மெட்பார்மினால் (Metformin) லேக்டிக் அமில உயர்வு(Lacticacidosis) எனும் வளர்சிதை மாற்ற கோளாறு தோன்றும் ஆபத்து அதிகரிப்பதாக நெடுங்காலமாக எண்ணப்பட்டு வருகின்றது. குறைந்தது ஒரு மாத காலமாவது நீடித்ததாக அறியப்பட்ட அனைத்து ஒப்பீட்டு மற்றும் கண்காணிப்பு ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளினைத் தொகுத்த இந்த திறனாய்வானது, மெட்போமினைப் பயன்படுத்திய 70,490 நோயாளர்-ஆண்டுகளிலோ அல்லது மெட்போமினைப் பயன்படுத்தாத 55,451 நோயாளர்-ஆண்டுகளிலோ இறப்பை உண்டுபண்ணும்(Fatal) அல்லது இறப்பை உண்டுபண்ணாத(Nonfatal) லேக்டிக் அமில உயர்வு ஒரு போதும் நிகழவில்லை என்பதைக் கண்டறிந்தது. மெட்போமின் சிகிச்சையின் போது அளவிடப்பட்ட சராசரி லேக்டிக் அமில மட்டங்கள், வெற்றுமருந்தினை (Placebo) அல்லது நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகளினைப் பயன்படுத்தும் போது பெறப்பட்ட அளவீடுகளுடன் எந்தவித வித்தியாசத்தையும் காட்டவில்லை. தொகுத்துக் கூறுவதாயின், ஆய்வு நிபந்தனைகளுக்கமைய மெட்போமின் வழங்கப்பட்ட போது அது லேக்டிக் அமில உயர்வு தோன்றும் ஆபத்தை அதிகரிப்பதோடு சம்பந்தப்பட்டிருப்பதற்கு எந்தவித ஆதாரமும் தற்சமயம் இல்லை.
மொழிபெயர்ப்பு: தனஞ்செயன் சஞ்சயன் மற்றும் சி.இ.பி.என்.அர். குழு